இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வானகம்

19 August 2012

இயற்கை ஞானி திரு.நம்மாழ்வார் நேர்காணல்

நன்றி : சிறகு சிறப்பு நிருபர்

நாம் நேர்காணல் செய்யவிருப்பவர் தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் முன்னணியில் இருப்பவர். ஆம் திரு.நம்மாழ்வார் அவர்கள். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர். கோவில்பட்டி மண்டல மழைப் பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியாற்றினார். பசுமைப் புரட்சி,  நிலச்சீர்திருத்தம், தொழில்மயமாக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறார். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்து வருபவர். “தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்‘ ‘வானகம்” போன்ற அமைப்புகளைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றுக்கும் கால்நடையாக சென்று அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருபவர். இனி திரு. நம்மாழ்வார் அவர்களின் நேர்காணல்:-

சிறகு: தங்களது தமிழின வாழ்வியல் பல்கலைக் கழகம், வானகம் போன்ற அமைப்புகளின் தேவை, அவசியம் என்ன?
திரு.நம்மாழ்வார்: இயற்கை வேளாண்மை என்பது வாயால் சொல்லி மற்றவர்கள் புரிந்து கொள்வது கிடையாது. ஆங்காங்கே மாதிரிகளை உருவாக்க வேண்டும். அந்த மாதிரிகளை உருவாக்கும்போதே பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். யார் இந்தக் கல்வியுடன் இணைந்து போய்க் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் செல்லும் இடமெல்லாம் இந்தத் தகவலை கொண்டு செல்ல வேண்டும்.  அதனால் ‘ அறிவினை விரிவு செய், அகண்டமாக்கு மானுட சமுத்திரம் நானென்று கூவு’ என்று பாரதிதாசன் சொன்னார். அந்த அறிவை விரிவு செய்வதற்காக இவற்றை உருவாக்குகிறோம். இயற்கை வலியது. மிகப் பெரியது. தன் மேல் இழைக்கப்பட்ட கொடுமைகளை அது தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும். ஆனால் புதிப்பிக்க முடியாத கட்டத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் டன் நஞ்சை இந்திய மண்ணில் தூவி வருகிறார்கள். எனவே இதிலிருந்தெல்லாம் மக்களை மீட்டெடுக்க வேண்டும். இயற்கையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் மாதிரி நிலங்கள், புலங்கள் வேண்டும். அவைகளுக்காகத்தான் இவற்றை உருவாக்கினோம். நிலம், புலம் மட்டும் இல்லை மாதிரி சமூகமும் வேண்டும். இரண்டையும் இணைத்துத்தான் வானகம் என்று பெயர் வைத்திருக்கிறோம். தமிழின வாழ்வியல் பல்கலைக் கழகத்தை உருவாக்கினோம். இது இடையில் நிர்வாகிகள் குழப்பங்களால் நின்று போய்விட்டது. அதன் இறுதி வடிவமாகத்தான் வானகத்தைப் பார்க்கிறேன்.
சிறகு: இயற்கை வேளாண்மைக்கு வர விவசாயிகளுக்கு சில மனத் தடைகள் உள்ளன. குறிப்பாக நாம் மட்டும் இயற்கை வேளாண்மைக்கு மாறிவிட்டால் பூச்சிகளிடம் இருந்து பயிர்களைக் காப்பாற்ற முடியுமா? இரசாயன பூச்சி கொல்லிகள் உபயோகிக்கும் மற்றவர்கள் பயிர்களில் இருந்து நமது பயிருக்குப் பரவி விடாதா என்பது போன்ற குழப்பங்கள் உள்ளன. உங்களிடம் வரும் விவசாயிகள் எவ்வாறு நம்பிக்கை பெறுகிறார்கள்?
திரு.நம்மாழ்வார்: எப்போது வானகத்திற்கு வருகிறார்களோ அப்போதே நம்பிக்கை வந்துவிடும். ஏனென்றால் கண்ணுக்கு முன் பார்க்கிறார்கள். அதற்குள் எந்த இரசாயனமும் தெளிக்கவில்லை. ஆடு, மாடு தின்னாத செடி கொடிகளை துண்டு துண்டாக நசுக்கி மாட்டு மூத்திரத்தில் ஊற வைக்க வேண்டும். பத்து நாள் ஆனால் பிறகு பூச்சு விரட்டு தயார். தெளித்து விட்டோம் என்றால் சின்ன சின்ன பூச்சிகள் நம் செடியில் வந்து முட்டை போடும். சின்ன சின்ன தகவல்கள்கூட நம் விவசாயிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பூச்சிக்கு நான்கு பருவம் உண்டு. முட்டை, புழு, கூட்டுப் புழு, பூச்சி. தாய் பூச்சி மென்மையான இலைகளில் உட்கார்ந்து முட்டை போடுகிறது. ஏனென்றால் முட்டையில் இருந்து வரும் புழு மென்மையான இலைகளைத்தான் தின்ன முடியும். ஆகவே இலை மீது பூச்சு விரட்டியை தெளித்து விட்டால் வாசனைக்கு வேறுவிதமான பூச்சிகள் வந்து உட்காரும். இது முதல். இரண்டாவது, ஒரு செடியில் பத்து பூச்சி இருக்கின்றன என்றால் அந்தப் பூச்சிகளை தின்ன இருபது பூச்சிகள் இருக்கின்றன. நாம் விஷம் தெளிக்கும் நேரத்தில் இந்த இருபது பூச்சிகள்தான் முதலில் சாகும். மறுபடியும் அந்தப் பூச்சிகள் வரும்போது அதைத் தின்பதற்கு வேறு பூச்சிகள் இல்லை. இருநூறு வகை பறவைகள் பூச்சிகள் தின்னும். நீங்கள் எப்போது நஞ்சு தெளித்தீர்களோ பறவைகள் தோட்டத்துக்கு வருவது நின்று விடுகின்றது. இந்த உண்மைகளை எடுத்துச் சொல்ல யாரும் இல்லை. அதற்காகத்தான் வானகத்தை தொடங்கினோம். ஆனால் வானகத்திற்கு வராமல் எங்கேயோ இருந்துகொண்டு பொய்யையே கட்டி அழுது கொண்டிருக்கிறார்கள்.
சிறகு: பல ஆண்டுகளாக இயற்கை வேளாண்மை குறித்து பேசி வருகிறீர்கள். உங்கள் பணிக்கு வரவேற்பு எப்படி உள்ளது? வருத்தம் அளிப்பதாக இருக்கிறதா? மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறதா?
திரு.நம்மாழ்வார்: ஆரம்பக் கட்டத்தில் இந்தக் கிழவன் ஏதோ புலம்புகிறான் என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு அடுத்த கட்டம் வந்தது. ஆங்காங்கே விவசாயிகள் செய்ய ஆரம்பித்தார்கள். ஜப்பானில், ஆஸ்திரேலியாவில் செய்கிறார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. கரூரில், வையம்பட்டியில், கடவூர் ஆகிய ஊர்களில் விவசாயிகள் பூச்சி விரட்டியை வாங்கிக் கொண்டு போய் தெளித்து வருகிறார்கள். இன்றைக்கு அறிவு பெற்ற சமுதாயம் தகவல் தொழில் நுட்பத்தில் வேலைக்குப் போனவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் எல்லோரும் வருகிறார்கள். ஏனென்றால் உணவில் நிறைய நஞ்சு கலப்பதால் எங்கு பார்த்தாலும் நோயாளிகள் இருக்கிறார்கள். பிறக்கும் குழைந்தைக்கும் புற்று நோய் இருக்கிறது. இந்த அநீதி தொடரக்கூடாது என்பதற்காக நிறைய பேர் உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள். கற்றுக் கொண்டு போய் இருக்கிறார்கள். இது மகிழ்ச்சிக்குரியது.
சிறகு: மாணவர்களிடம் பேசுகிறீர்கள். அவர்களிடம் எத்தகைய வரவேற்பு உள்ளது? அடுத்த தலைமுறையினர் இதில் ஆர்வம் காட்டுவார்கள், பெரிய மாற்றம் உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
திரு.நம்மாழ்வார்: ஆரம்பத்தில் மாணவர்களை தவிர்த்து வந்தேன். என்னுடைய இலக்கு விவசாயிகள்தான் என்பதால் தவிர்த்தேன். பின்னர் பார்த்தேன், விவசாயிகளுக்கு ஒரு பயம் இருக்கிறது. இப்போது வந்துகொண்டிருக்கும் விளைச்சலும் வராமல் போய்விடுமோ என்று. அதனால் மாணவர்கள் மத்தியில் இதை விதைத்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் வெவ்வேறு துறைக்குப் போனாலும் தன்னுடைய பங்கை ஆற்றுவார்கள். இளமையில் கல் என்று சொன்னார்கள். இளமையில் விதைக்கப்படும் விதை அது நீண்ட காலத்திற்கு வேலை செய்யும். அதனால்தான் மாணவர்கள் மத்தியில் எங்கு பேச அழைத்தாலும் போகிறேன். வரவேற்பு நன்றாக இருக்கிறது. அவர்களின் எதிர்காலம் இதில் பாதுகாக்கப்படுகிறது.
சிறகு: நூறு நாள் வேலைத் திட்டத்தில் – ஆந்திராவில் ஒரு மாவட்ட நிர்வாக அதிகாரி தன்னுடைய தனிப்பட்ட அக்கறையின் காரணமாக விவசாயிகள் தங்கள் நிலத்தில் மழை நீரை தேக்கி வைக்க குட்டைகள் வெட்டிக் கொள்ளலாம் என்று அனுமதித்ததாக நீங்கள் ஒரு முறை கூறினீர்கள். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நிலத்தைப் பறிக்கும் அரசு, மக்களுக்கு நிலத்தோடு இருக்கும் உறவை அறுத்தெறிகிறது. உங்கள் பார்வையில் நூறு நாள் வேலைத் திட்டம் எப்படி?
திரு.நம்மாழ்வார்: நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை எதுவும் நடக்கவில்லை. இதை நான் சொல்வதில்லை. நாடாளுமன்றத்தில் 543 பேர் இருக்கிறார்கள். அவர்களும் உட்கார்ந்து உட்கார்ந்துதான் எந்திறிக்கிறார்கள். அவர்கள் மாதம் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். இவர்கள் மட்டும் உட்கார்ந்து எழுந்தால் என்ன தவறு? ஒரு நாளைக்கு நூறு ரூபாய்தானே கொடுக்கப் போகிறார்கள்? முப்பது நாளுக்கு மூன்றாயிரம்தானே. இதை வைத்து வருடத்திற்கும் சாப்பிட வேண்டும். இந்தத் திட்டத்தால் நல்லது நடக்கவில்லை. எங்கு தவறு நடக்கிறது என்றால் அரசியல் தளத்தில் இருக்கிறது. பெரிய வணிக அமைப்புகள் அரசுக்கு யோசனை வழங்குகிறது. என்னவென்றால், அமெரிக்காவில் ஒன்னரை விழுக்காடு மக்கள்தான் கிராமத்தில் வாழ்கிறார்கள். இங்கு அறுபது விழுக்காடு மக்கள் இருக்கிறார்கள். அமெரிக்கா போல் முன்னேற வேண்டுமானால் இங்கு அறுபது விழுக்காடு மக்கள் இருக்கக் கூடாது. முப்பது விழுக்காடு மக்களை குறைக்க வேண்டும் என்று சேம்பர் ஆப் காமர்ஸ் அரசுக்கு பரிந்துரை செய்து விட்டார்கள். அதை அடிப்படையாக வைத்துதான் அரசு திட்டம் போட்டு –உழவு சார்ந்தவர்களை உழவு உற்பத்திக்கே போகாதபடி பிய்த்து வெளியில் எடுக்கிறார்கள். இதனால் வேளாண் தொழில் தெரிந்த ஆட்கள் கிராமத்தில் இருக்க மாட்டார்கள். இப்போது அதுதான் நடக்கிறது. விவசாயி என்ன செய்கிறான்- நிலத்தை விற்று பணத்தை வங்கியில் போட்டு விட்டு  எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். இளைஞர்களை படிப்பு என்று சொல்லி வெளியில் இழுத்து விட்டார்கள். வேலை என்று கூறி திருப்பூருக்கோ சென்னைக்கோ இழுத்துவிட்டார்கள். பல பகுதிகளை பட்டணமாக்கி கிராமங்களை விழுங்கி கிராமத்தில் இருக்கும் மனிதன், மண், தண்ணீர் எல்லாவற்றையும் நாசம் செய்து விட்டார்கள். கிராமங்களை பட்டணங்களின் சாக்கடை ஆக்கிவிட்டார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் நூறு நாள் வேலைத் திட்டத்தை நான் பார்க்கிறேன். அந்தத் திட்டத்தை மகாத்மா காந்தி பெயரில் வைத்திருப்பது பெரிய கேலிக் கூத்து. மகாத்மா காந்தி, ‘பெருவித தொழில் உற்பத்தி தேவை இல்லை. பெருவாரியான மக்களால் உற்பத்தி நடக்க வேண்டும்’ என்று சொன்னார். அவர் பெயரிலேயே தொழில் தெரியாமல் மக்களை மாற்றும் போக்கு பெரிய நகைப்பிற்குரியது.
சிறகு: இயற்கை வேளாண்மைக்கு ஆதரவாக ஒரு கொள்கை முடிவை அரசை எடுக்க வைக்க ஏதேனும் திட்டம் உள்ளதா? இதற்கு என்னவிதமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்?
திரு.நம்மாழ்வார்: இதற்குப் போராட்டமே தேவை இல்லை. தமிழ்நாட்டைப் பொருத்து சொல்கிறேன். ஆயிரம் பேருக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். 1000 நம்மாழ்வார்களை உருவாக்க வேண்டும். நூறு இடங்களில் பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும். அந்தந்த வட்டாரத்தில் அமைக்க வேண்டும். பெண்கள் வெகுதூரம் போவதில்லை. அவர்களுக்கு அருகிலேயே சென்று கற்றுக் கொண்டு திரும்பும் வகையில் பயிற்சி மையங்கள் உருவாக்க வேண்டும். இதை உருவாக்கினால் பொய்யை அவர்கள் புரிந்து கொள்வார்கள். ‘பொய்யைத் தொழுது அடிமை செய்வார்க்கே செல்வமெல்லாம் உண்டு’ என்று பாரதி சொன்னான். அதுதான் இங்கு நடைபெறுகிறது. எனவே பொய்யைத் தொழுவதை விட்டு விட்டு உண்மையை தேடி வாருங்கள் என்று சொன்னால் மக்கள் மாறுவார்கள். மக்கள் மாறினால் அரசாங்கம் மாறியே தீர வேண்டும். மக்களை மாற்றாமல் அரசை மாற்ற நினைத்து செய்யும் செயல்கள் ஒன்றும் பயன்படாது.
சிறகு: வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பலர் விவசாயத்தில் ஈடுபட விரும்புகிறார்கள். அவ்வாறு விரும்பும் இன்றைய தலைமுறையினருக்கு உங்கள் ஆலோசனை என்ன?
திரு.நம்மாழ்வார்: அமெரிக்கா போன நிறைய பேர் திரும்பி விட்டார்கள். அங்கு வாழ்க்கை இல்லை. நாங்கள் வாழவேண்டும் என்று நினைக்கிறோம். வெறும் சம்பாத்தியம் மட்டுமே வாழ்க்கை இல்லை. எங்கள் கையில் கொஞ்சம் பணம் இருக்கிறது. நிலம் கொஞ்சம் மலிவாகக் கிடைக்குமா என்று கேட்கிறார்கள். இதில் நாம் ஆய்வு நடத்த வேண்டும். இப்போது தீவிரமான சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் அறுபது சதம் மக்கள் கிராமங்களில் வாழ்கிறார்கள். அதனால் கிராமத்தை வாழத் தகுந்ததாக மாற்ற வேண்டும். இப்போது பருவ மழை இல்லை, ஆனால் வெள்ளம் வருகிறது. வெள்ளம் வரும்போது கடலில் எப்படி அதை வடிப்பது என்று சிந்திக்கிறார்களே தவிர தண்ணீரை தேக்குவதைப் பற்றி யோசிக்கவில்லை. அரசர்கள் தன் பிறந்த நாளுக்கு ஏரி வெட்டினார்கள், வென்ற நாளுக்கு ஏரி வெட்டினார்கள். இராமநாதபுரத்தில் நாரை பறக்காத நாற்பத்தி மூன்று கண்மாய் ஏரி இருக்கிறது. அதை ராஜசிம்மன் என்ற மன்னன் வெட்டி இருக்கிறான். அது இப்போது வண்டல் படிந்து மேடாக தண்ணீர் இல்லாத இடமாக இருக்கிறது. பொதுப்பணித் துறை அதை ஆழப்படுத்தும் வேலையை செய்யவில்லை. மாடுகள் இன்று கசாப்பு கடைகளுக்கு போகிறது. மாடுகளை படுக்க வைத்து எழுப்பினால் அங்கு எந்த பயிரும் விளையும். கிராமத்தை அறிவுமிக்கதாகவும் வளம் மிக்கதாகவும் மாற்ற வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் பண்ணை சேவை மையம் இருக்கவேண்டும். அதில் விவசாயிகள் பயன்படுத்தும் கருவிகள் இருக்க வேண்டும். கிராமப் பள்ளிகளை வசதி இல்லாமல் ஆக்கிவிட்டு பட்டணத்திற்கு அனுப்புகிறார்கள். உன் கிராமம் உருப்படாது என்று சொல்லாமல் சொல்கிறார்கள். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை வலுவாக்கி பள்ளியைச் சுற்றி மரங்கள் வளர்த்து பள்ளிக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்யும் வேலையில் இறங்க வேண்டும். ஒவ்வொரு வீட்டை சுற்றியும் பத்து வகை மரங்கள் இருக்க வேண்டும். வீட்டுக்கு முன் ஒரு வேப்பமரம் இருக்கவேண்டும், பக்கத்தில் ஒரு முருங்கை மரம் இருக்க வேண்டும், ஒரு பப்பாளி மரம் இருக்க வேண்டும், குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழை மரம் இருக்க வேண்டும், பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம் இருக்க வேண்டும், ஒரு எலுமிச்சை மரம் இருக்க வேண்டும்., அதன் நிழலில் ஒரு கறுவேப்பிலை செடி இருக்க வேண்டும், ஒரு நெல்லிச் செடி இருக்க வேண்டும். வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க வேண்டும். இடம் இருந்தால் ஒரு பலா மரம் இருக்க வேண்டும். ஒரு மா மரம் வைக்க வேண்டும். இப்படி இருந்தால் ஒருவர்கூட பசியுடன் தூங்க மாட்டார்கள். அரசு சலுகை வழங்குவது மக்களுக்கு சென்று சேர்வதில்லை. ஒவ்வொரு ஊரிலும் ஒரு தகவல் மையம் இருக்க வேண்டும். அரசு அதிகாரிகள் அங்கு போய் உங்களுக்கு என்னென்ன வேண்டும் என்று சொல்ல வேண்டும். ஒரு குளம் கட்டிவிட்டு சுற்றி யாரும் காலை வைத்து இறங்காமல் பார்த்துக் கொண்டால் குடி நீர் பஞ்சத்தை ஒழித்து விடலாம். ஏரிக்கரைகளில் மரங்களை நடவேண்டும். அது ஆடு மாடுகளுக்கு தீவனம் ஆகும். அதில் குதிரை சவாரி செய்யலாம், குளத்தில் மீன் வளர்க்கலாம், படகு விடலாம். பட்டணத்தில் இருப்பவன் கிராமத்துக்கு வருவான். அப்படி கிராமங்களை உருவாக்குவது பற்றி நண்பர்களிடம் சொல்லி இருக்கிறேன். நண்பர்களிடம் ஒப்புதலும் வந்துவிட்டது. இதற்கு ஆயிரம் தொண்டர்கள் தேவை. எந்த இடத்தில் வேலை துவங்கினாலும் மண்வெட்டி கூடையுடன் வரத் தயாராக இருக்கவேண்டும். இதுபோன்ற ஆட்களை தேடி வருகிறேன். இதில் வெளிநாட்டு நண்பர்களும் வந்து இணைவார்கள் என்று நம்புகிறேன்.
சிறகு: விதைகளே பேராயுதம் என்கிறீர்கள். நாம் இழந்த பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுக்க முடியுமா?
திரு.நம்மாழ்வார்: வெள்ளைக்காரன் நம் நாட்டை விட்டுப் போகும்போது இந்தியாவில் இருந்த நெல் ரகங்கள் முப்பது ஆயிரம். எல்லா ஆவணங்களும் இதை பதிவு செய்திருக்கிறது. கேரளத்தினர் இருநூறு வகை பாரம்பரிய நெல் விதைகளை கண்டுபிடித்து எடுத்து விட்டார்கள். தமிழ்நாட்டில் அறுபத்து மூன்று நெல் விதைகளை கண்டு பிடித்திருக்கிறார்கள். இன்னும் கண்டுபிடித்து சேர்த்தால் நூறு ஆகும். நூறு என்பதே பெரிய வெற்றிதான். பாரம்பரிய நெல்லின் சிறப்பு என்னவென்றால் பூச்சி, நோய் தாக்குவதில்லை, ரசாயன உரம் வேண்டியதில்லை. வங்கியில் கடன் வாங்க வேண்டியதில்லை, கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்யவேண்டியதில்லை என்று நிறைய சாதகங்கள் உள்ளன. எனவேதான் விதையை பேராயுதமாக பயன்படுத்த வேண்டும் என்றோம். காய்கறி விதைகளில் போதிய அளவு நாம் வேலைகள் செய்யவில்லை. நண்பர்களிடம்- அடுத்த தை மாதத்திற்குள் எங்கு பார்த்தாலும் உழவர்களின் காய்கறி விதைகள் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். நடக்கும் என்று நம்புகிறேன்.

சிறகு: வானகத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்புபவர்கள் தங்களை இணைத்துக் கொள்வது எப்படி?
திரு.நம்மாழ்வார்: வானகம் ஒரு அறக்கட்டளை. வானகத்தைத் தாண்டி ஒரு வளையம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆலோசனை வளையம் போல் வரும். இதில் எல்லோரும் இணையலாம்.

சிறகு: உங்கள் முயற்சிக்கு வாழத்துக்கள் ஐயா. உலகெங்கும் உள்ள தமிழர்கள் இதைக் கேட்டு பயனடைவார்கள் என்று நம்புகிறோம்.
திரு.நம்மாழ்வார்: ஒரு தகவல் சொல்ல வேண்டும். எனக்கு ஒரு நினைவு இருக்கிறது. இந்த பூமியில் எந்த மூலைமுடுக்கில் இருந்தாலும் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அவர்கள் பெயரைப் போட்டு ஒரு மரம் வளர்க்க வேண்டும். இதனால் அவர்கள் வானகத்தில் என்னுடைய பங்கு இருக்கிறது என்று நினைக்கலாம். மனதாலோ உடலாலோ நோய் பட்டால் இங்கு வரலாம் தங்கலாம். இதுபோன்ற ஒரு சாந்தி வனத்தை உருவாக்கும் எண்ணம் என்னுள் இருக்கிறது.

சிறகு சிறப்பு நிருபர்


No comments:

Post a Comment