இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வானகம்

28 July 2012

உணவில் விஷம் வைக்கும் மத்திய அரசின் ஒருதலைபட்ச முடிவு- !
----------------------------------
மத்திய அரசு போன புதனன்று உச்ச நீதி மன்றத்தில் பதிவு செய்த அபிடவிட்டில் என்டோசல்பான் விஷத்தை கேரளா, கர்நாடகாவில் மட்டும் தடை செய்து மற்ற மாநிலங்களில் தயாரிக்கவும் உபயோகபடுத்தவும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளது..!
 

கர்நாடகா கேரளா மட்டும் சுத்தமா இருக்கணும்;மத்தவன்லாம் விஷ உணவு உண்ண வேண்டுமா..?? அப்போ மத்தவங்க எல்லாம் சாகலாமா..! எந்த ஊர் நியாயம்..!

இதை இங்கு தேக்கிவைக்கவோ அல்லது முழுவதும் ஏற்றுமதி செய்வதோ முடியாது அதனால் மற்ற மாநிலத்தில் உபயோக படுத்த வேண்டும்..!இத சொல்ல தான் உங்களுக்கு ஒட்டு போட்டு போட்டோமா?

நம்மாழ்வார் முதற்கொண்டு அமீர்கான் வரை கதறியும் மத்திய அரசின் காதுகளில் விழாதது, அவர்கள் எந்த அளவு மக்களிடம் இருந்து விலகியும் பெருமுதலாளிகளின் விசுவாசியாகவும் உள்ளதை காட்டும்.

எல்லா நாடுகளும் இந்த விஷத்தை ஒழிக்க நினைக்கும் போது, காங்கிரஸ் அரசு மட்டும் நடைமுறைபடுத்த முயற்சிப்பது நியாயமா..??? அதுவும் ஒருதலைபட்சமாக..! சுத்தமான அயோக்கியத்தனம்/மக்கள் விரோத போக்கு அல்லவா..??

http://newindianexpress.com/cities/thiruvananthapuram/article576123.ece

http://www.thehindu.com/news/national/article3688642.ece

http://cseindia.org/node/4393

18 July 2012

   

 டாக்டர் கோ. நம்மாழ்வார் எழுதிய,  

“ நோயினைக் கொண்டாடுவோம் ”

இயல்வாகை பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்...

2012 ஜூலை 22 காலை 10 மணிக்கு,
ஆண்டாள் திருமண மண்டபம், கோவை.


நிகழ்வில்........

கவிதா குல்கர்னி - பாரம்பரிய விதைகளை மீட்டுருவாக்கம் செய்து மக்கள் மனதில் பரவலாக விதைத்தவர், மரபு மாற்று விதைகளுக்கு எதிராக தீவிரமாக இயங்கிவரும் சூழலியலாளர்.

தணல் ஸ்ரீ தர் - கேரளாவில் எண்டோசல்பான் எனும் எமனை ஒழிப்பதில் தீவிரமாக போராடி வெற்றி கண்டவர்.

பூச்சியல் அறிஞர் செல்வம் - நன்மை செய்யும் பூச்சிகள் அடையாளம் காட்டியவர்.

மாதேஸ்வரன் - தமிழ் பாரம்பரிய கலைகளை காப்பாற்றி வருபவர்.

பசும்புலரி ரவீந்திரன் - பசுமை கோவைக்கு பாடுபடுபவர்.

கார்த்தீஸ்வரன் - குழந்தைகளின் மகிழ்வில் இயங்கும் சமூகவியலாளர்.

வருக..
தொடர்பு கொள்ள : 9965689020, 9442816863
வாழ்த்தையும், அன்பையும் வேண்டும்...
குக்கூ & இயல்வாகை

4 July 2012

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்"

 


இருளும் ஒளியும் சந்திக்கும் அதிகாலையில் விழிப்பு, தாவரங்களோடு உரையாடிக்கொண்டே பண்ணைத் தோட்டத்தில் ஒரு நடைப்பயிற்சி, கொஞ்சம் யோகாசனம், கொஞ்சம் மூச்சுப்பயிற்சி என்று தன் நாளை ரம்மியமாய் ஆரம்பிக்கிறார் நம்மாழ்வார். 75 வயதிலும் 25 வயது இளைஞர்போல் உற்சாகமாக உழைத்துவரும் நம்மாழ்வாரிடம் ஃபிட்னெஸ் ரகசியம் பேசலாமா...

''எனது ஆரோக்கியத்துக்கான அடிப்படைக் காரணம் என்னுடைய வாழ்க்கைமுறை. இது கிராமத்து வாழ்க்கை கொடுத்த பரிசு. தோட்டத்தில், பண்ணையில், மேடையில் என்று எங்காவது ஓரிடத்தில் உழைத்துக்கொண்டே இருப்பேன். உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.

  ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும், இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.

இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது.

தினமும் காலையில் கம்பு, தினை மாவு, கொஞ்சம் கருப்பட்டி சேர்த்து கஞ்சிவைத்துக் குடிக்கிறேன். இந்தக் கஞ்சி விஷம் இல்லாதது. அதாவது, ரசாயனம் இல்லாதது. கரும்புக்கு ரசாயனம் இடுவதால் வெல்லத்தில் ரசாயனம் இருக்கிறது. பனை மரத்தில் ஏறி நம் ஆட்கள் இன்னும் பூச்சி மருந்து அடிக்கவில்லை. அதனால்தான் பனை வெல்லம் சுத்தமான இயற்கை உணவாக இருக்கிறது.

பகல் வேளையில் ரசம் அல்லது மோர் மட்டுமே சேர்த்துக் கொஞ்சமாக சாதம் சாப்பிடுகிறேன். இடையில் காய்கறி ரசம். இரவில் இரண்டு அல்லது மூன்று இட்லி மட்டுமே ஆகாரம். பசிக்காவிட்டால் சாப்பிடுவது இல்லை. இதுதான் என்னுடைய சாப்பாட்டு அட்டவணை.

வெளியிடங்களுக்குச் செல்லும்போது உணவு விடுதிகளில் சாப்பிடுவது இல்லை. அதிகபட்சமாக நண்பர்களின் வீடுகளில் சாப்பிடுவேன். இல்லாவிட்டால் பழங்கள், கடலை மிட்டாய், பேரீச்சம்பழம் மட்டுமே என் உணவு. காபி, டீ சாப்பிடுவதைவிட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டன.

ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் டன் அளவு பூச்சிக்கொல்லி நஞ்சுகள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களையே இன்றைக்கு மக்கள் சாப்பிடுகிறார்கள். நோயோடு பலரும் வாழ்வதற்கு பூச்சிக்கொல்லி நஞ்சுகள் ஒரு முக்கியமான காரணம்.

உடல் ஆரோக்கியமாக இருந்தால், மனமும் நன்றாக இருக்கும். உடல், மன ஆரோக்கியத்துக்கு இயற்கை ஒரு பெரிய வரப்பிரசாதம். செடி ஒன்றை நட்டுவைத்து, அது வளர்வதையும் மொட்டுவிடுவதையும் காய்ப்பதையும் கவனித்துவந்தால், மனதுக்குள் குதூகலம் பிறக்கும். இதை ஒரு சிகிச்சைமுறையாகக்கூட மருத்துவர்கள் சொல்வார்கள். தாவரங்களிடமும் செல்லப் பிராணிகளிடமும் அன்பு செலுத்திப் பாருங்கள். அதன் மகத்துவம் புரியும்'' என்றவரின் பேச்சு மெள்ள இன்றைய இளைஞர்களின் புகை, மதுப் பழக்கம் நோக்கிச் சென்றது.

''மது, புகை வியாபாரிகள் தங்களது லாபத்துக்காக இளைஞர்கள் மீது இந்தப் பழக்கத்தைத் திணிக்கிறார்கள். வருங்காலத் தூண்களாக விளங்க வேண்டிய இளைஞர்கள், மது - புகைப் பழக்கத்துக்கு அடிமையாகி நுரையீரலையும் குடலையும் கெடுத்துச் சீரழிகிறார்கள். இதன் தொடர்ச்சியாகச் சமூகச் சிக்கல், பொருளாதாரச் சிக்கல், குடும்ப உறவில் சிக்கல் என்று எல்லாத் தரப்பிலும் பிரச்னைகள் குவிகின்றன. இதை அனைவரும் சேர்ந்து ஒருமித்துக் கண்டிக்க வேண்டும். 'உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தச் செயலையும் நாம் செய்யக் கூடாது’ என்ற உறுதியான சுயக் கட்டுப்பாடு ஒன்றே இதுபோன்ற தீய பழக்கங்களின் பிடியில் சிக்காமல் நம் சமூகத்தை காக்கும்.

'இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்’
- என்கிறார் வள்ளுவர்.

அளவறிந்து அமைதியாய் சாப்பிட்டால் ஆரோக்கியம் நம் பக்கம் நிற்கும். இல்லாவிட்டால் வள்ளுவர் சொல்வதுபோல் நோய்தான் நம் பக்கம் நிற்கும். இன்றைய இளைய தலைமுறையினருக்குச் சாப்பிடக்கூட நேரம் இல்லை. அவசரம் அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு ஓடுவது நிறைய வியாதிகள் வருவதற்குக் காரணமாகிவிடுகிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கெட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக அதில் கலக்கும் ரசாயனங்கள் நம் வயிற்றுக்குள் சென்றும் அதே வீரியத்தோடுதான் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பசித்தால் மட்டுமே உணவு, அதுவும் இயற்கை உணவு; அதையும் கொஞ்சம் கொஞ்சமாக உமிழ்நீரோடு சேர்த்து ரசித்து மென்று சாப்பிட்டால் எப்படி வரும் வியாதி? எல்லாமே கலைதான்!

நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.

உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.

நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.

எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு. நான் நாள் தவறாமல் யோகாசனம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றைச் செய்கிறேன். முதுகெலும்பை நேராக வைத்திருக்கும் வஜ்ராசனமும் செய்வேன். இவைதான் என் ஆரோக்கிய ரகசியம்'' என்று தனது 

வெண்தாடியை நீவியபடி பளிச்செனச் சிரிக்கிறார்
பசுமை நாயகன்!
........இயற்கை ஞானி நம்மாழ்வார்

இடம் :
வானகம்,
பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவு பாதுகாப்பிற்கான 

நம்மாழ்வார் உயிர் சூழல் நிறுவனம்,
கடவூர், கரூர் மாவட்டம்.
கைபேசி : 94880 55546

1 July 2012

மானாவாரி அல்ல, வானாவாரிப் பயிர்கள்!

- சா. ஜெயப்பிரகாஷ்
தினமணி First Published : 01 Jul 2012 02:36:01 PM IST

http://dinamani.com/Images/article/2012/7/1/30kon5.jpg
அன்று - இன்று



                  
                             திருச்சி, மணப்பாறை பொன்னணியாறு அணையைத் தாண்டி சிறிது தொலைவில் 35 ஏக்கர் பரப்பளவில் - கரூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது "வானகம்'. "பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்புக்கான நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம்' என்பது இந்த வானகம் அறக்கட்டளையின் பெயர் விரிவாக்கம்.

 தண்ணீரில்லாத வறட்டுக் காட்டை பயிர் செய்யும் - பயிர் செய்யப் பயிற்சியளிக்கும் இடமாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர், இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரும் அவரது சகாக்களும். இதுபோன்ற பயிற்சிகளில் இளைஞர்களைப் பார்க்க முடியுமா? என்ற கேள்வி இயல்பானது. இங்கு இளைஞர்கள் குறிப்பாக சிறுவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமே அதிகம் பேசுகிறார் நம்மாழ்வார்.

 உரங்களாலும், கடன்களாலும், குறைந்த அளவு விலை நிர்ணயம் போன்ற தற்போதைய விவசாயச் சிக்கலை, இயற்கை விவசாயம் என்ற நிலைக்கு மாற்ற முடியுமா? என்ற கேள்வியைக் கேட்டு நம்மாழ்வாரைப் பேசவைத்தோம். அவர்

 கூறியதிலிருந்து...

""உண்மைதான். ரசாயன உரங்களால் நிலங்கள் தரிசாகக் கிடக்கும் நிலையில் இயற்கை விவசாயத்தை விட்டால் வேறு கதியில்லை. எல்லோரையுமே நோயாளி ஆக்கிவிட்டார்கள்.

 விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துவிட்டன. தமிழ்நாட்டில் காவல்துறையிடம் போதிய ஆவணங்கள் இல்லாததால் வட நாட்டில் விவசாயிகள் தற்கொலை என்ற தலைப்புச் செய்தியைக் கூறி வருகிறோம். இங்கும் தற்கொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வேறு மார்க்கம் இல்லை என்பதுதான் உண்மை.

 இயற்கை வேளாண்மையில் தொடக்கத்தில் விளைச்சல் குறைவாக இருக்கலாம். அதுவும்கூட அவர்களின் அனுபவக் குறைவின் காரணமாகவே இருக்கும். ஆனால், போகப்போக, உழைப்பு குறையும், விளைச்சல் அதிகரிக்கும்.

 அதேபோல, இயற்கை வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு தற்போதைய சந்தையும் சரியாக இல்லை. இயற்கை உணவுகளை உட்கொள்ளும் நுகர்வோர் இயக்கத்தையும் உருவாக்க வேண்டியுள்ளது.

 அப்போது அவர்களுக்கான உரிய விலையையும் பெற்றுத் தர முடியும். விவசாயிக்கும் நுகர்வோருக்கும் நேரடித் தொடர்பை ஏற்படுத்த வேண்டும். சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்றார் நம்வாழ்வார்.

 கடந்த 4 ஆண்டுகளில் இங்கு வந்து பயிற்சி எடுத்துச் சென்றவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தாண்டுகிறது.

 ""சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் உப்பாக இருக்கும் நிலையில், வானகத்தில் அருமையான சுவையுடன் குடிநீர் கிடைக்கிறது. இதற்குக் காரணம் மழைக்காலத்தில் வெள்ளமாக அடித்துச் சென்ற நீரை பூமிக்கடியில் செலுத்தியதன் விளைவு'' என்கிறார் ஏங்கெல்ஸ் ராஜா.

 பயிற்சியின்போது இங்கு வழங்கப்படும் உணவு பெரும்பாலும் இங்கேயே உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை விவசாய விளைபொருள்களே. நகர்ப்பகுதி ருசி கண்ட நாக்கு- வழக்கமான அரிசிச் சோறு, பருப்பு சாம்பார், ரசம், மோர் என்றாலும்- இந்த உணவை உண்டதும் துள்ளிக் குதிப்பர்.

 இயற்கை விவசாயம் குறித்த புத்தகங்கள், கம்பு, கேழ்வரகு கூழுக்காக அரைத்த மாவு, இங்கேயே விளைவிக்கப்பட்ட சிறுதானியங்களான சாமை, திணை, வரகு, குதிரைவால் போன்றவை விற்பனை செய்யப்

 படுகின்றன.

 வானகத்துக்குள் "பயோ கேஸ்' தயாரிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. இங்கு வளர்க்கப்படும் மாடுகளும், ஆடுகளும் விவசாய உற்பத்திக்கான உரங்களைத் தருகின்றன.

 விவசாய உற்பத்தியில் குறிப்பாக நெல் பயிரில், நெற்கதிர்கள் வீட்டுக்கும், வைக்கோல் போன்றவை மாட்டுக்கும், வேர் உள்ளிட்ட அடிக்கட்டை நிலத்துக்கும் (பசுந்தழை உரம்) என்பதே இயற்கையின் படைப்பு என்கின்றனர்.

 வறட்டு பூமியிலும் செடிகளை வைத்துவிட்டு மண்பரப்பின் மேல் வீணாக உள்ள செடிகளை துண்டுகளாக வெட்டிக் குவித்து வைத்துவிட்டால் எத்தனை வெயிலையும் தாங்கி வளரும் என்கிறார்கள். இந்த முறையை "மூடாக்கு' என்று அழைக்கின்றனர்.

 நாமெல்லாம் "மானாவாரி பயிர்கள்' என்று குறிப்பிடுகிறோமல்லவா? உண்மையில் அவை "வானாவாரிப் பயிர்கள்'. பேச்சு வழக்கில் வானத்தை "மானம்' என்று அழைத்து அழைத்து அவை மானாவாரிப் பயிர்களாகிவிட்டன என்கிறார்கள்.

 இதுபோல ஏராளமான எளிய- இயற்கை விவசாய முறைகளைப் பயிற்றுவிக்கும் பல்கலைக்கழகமாக செயல்பட்டு வருகிறது "வானகம்'.
நன்றி : தினமணி மற்றும் சா. ஜெயப்பிரகாஷ்