இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வானகம்

1 July 2012

மானாவாரி அல்ல, வானாவாரிப் பயிர்கள்!

- சா. ஜெயப்பிரகாஷ்
தினமணி First Published : 01 Jul 2012 02:36:01 PM IST

http://dinamani.com/Images/article/2012/7/1/30kon5.jpg
அன்று - இன்று



                  
                             திருச்சி, மணப்பாறை பொன்னணியாறு அணையைத் தாண்டி சிறிது தொலைவில் 35 ஏக்கர் பரப்பளவில் - கரூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது "வானகம்'. "பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்புக்கான நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம்' என்பது இந்த வானகம் அறக்கட்டளையின் பெயர் விரிவாக்கம்.

 தண்ணீரில்லாத வறட்டுக் காட்டை பயிர் செய்யும் - பயிர் செய்யப் பயிற்சியளிக்கும் இடமாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர், இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரும் அவரது சகாக்களும். இதுபோன்ற பயிற்சிகளில் இளைஞர்களைப் பார்க்க முடியுமா? என்ற கேள்வி இயல்பானது. இங்கு இளைஞர்கள் குறிப்பாக சிறுவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமே அதிகம் பேசுகிறார் நம்மாழ்வார்.

 உரங்களாலும், கடன்களாலும், குறைந்த அளவு விலை நிர்ணயம் போன்ற தற்போதைய விவசாயச் சிக்கலை, இயற்கை விவசாயம் என்ற நிலைக்கு மாற்ற முடியுமா? என்ற கேள்வியைக் கேட்டு நம்மாழ்வாரைப் பேசவைத்தோம். அவர்

 கூறியதிலிருந்து...

""உண்மைதான். ரசாயன உரங்களால் நிலங்கள் தரிசாகக் கிடக்கும் நிலையில் இயற்கை விவசாயத்தை விட்டால் வேறு கதியில்லை. எல்லோரையுமே நோயாளி ஆக்கிவிட்டார்கள்.

 விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துவிட்டன. தமிழ்நாட்டில் காவல்துறையிடம் போதிய ஆவணங்கள் இல்லாததால் வட நாட்டில் விவசாயிகள் தற்கொலை என்ற தலைப்புச் செய்தியைக் கூறி வருகிறோம். இங்கும் தற்கொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வேறு மார்க்கம் இல்லை என்பதுதான் உண்மை.

 இயற்கை வேளாண்மையில் தொடக்கத்தில் விளைச்சல் குறைவாக இருக்கலாம். அதுவும்கூட அவர்களின் அனுபவக் குறைவின் காரணமாகவே இருக்கும். ஆனால், போகப்போக, உழைப்பு குறையும், விளைச்சல் அதிகரிக்கும்.

 அதேபோல, இயற்கை வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு தற்போதைய சந்தையும் சரியாக இல்லை. இயற்கை உணவுகளை உட்கொள்ளும் நுகர்வோர் இயக்கத்தையும் உருவாக்க வேண்டியுள்ளது.

 அப்போது அவர்களுக்கான உரிய விலையையும் பெற்றுத் தர முடியும். விவசாயிக்கும் நுகர்வோருக்கும் நேரடித் தொடர்பை ஏற்படுத்த வேண்டும். சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்றார் நம்வாழ்வார்.

 கடந்த 4 ஆண்டுகளில் இங்கு வந்து பயிற்சி எடுத்துச் சென்றவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தாண்டுகிறது.

 ""சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் உப்பாக இருக்கும் நிலையில், வானகத்தில் அருமையான சுவையுடன் குடிநீர் கிடைக்கிறது. இதற்குக் காரணம் மழைக்காலத்தில் வெள்ளமாக அடித்துச் சென்ற நீரை பூமிக்கடியில் செலுத்தியதன் விளைவு'' என்கிறார் ஏங்கெல்ஸ் ராஜா.

 பயிற்சியின்போது இங்கு வழங்கப்படும் உணவு பெரும்பாலும் இங்கேயே உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை விவசாய விளைபொருள்களே. நகர்ப்பகுதி ருசி கண்ட நாக்கு- வழக்கமான அரிசிச் சோறு, பருப்பு சாம்பார், ரசம், மோர் என்றாலும்- இந்த உணவை உண்டதும் துள்ளிக் குதிப்பர்.

 இயற்கை விவசாயம் குறித்த புத்தகங்கள், கம்பு, கேழ்வரகு கூழுக்காக அரைத்த மாவு, இங்கேயே விளைவிக்கப்பட்ட சிறுதானியங்களான சாமை, திணை, வரகு, குதிரைவால் போன்றவை விற்பனை செய்யப்

 படுகின்றன.

 வானகத்துக்குள் "பயோ கேஸ்' தயாரிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. இங்கு வளர்க்கப்படும் மாடுகளும், ஆடுகளும் விவசாய உற்பத்திக்கான உரங்களைத் தருகின்றன.

 விவசாய உற்பத்தியில் குறிப்பாக நெல் பயிரில், நெற்கதிர்கள் வீட்டுக்கும், வைக்கோல் போன்றவை மாட்டுக்கும், வேர் உள்ளிட்ட அடிக்கட்டை நிலத்துக்கும் (பசுந்தழை உரம்) என்பதே இயற்கையின் படைப்பு என்கின்றனர்.

 வறட்டு பூமியிலும் செடிகளை வைத்துவிட்டு மண்பரப்பின் மேல் வீணாக உள்ள செடிகளை துண்டுகளாக வெட்டிக் குவித்து வைத்துவிட்டால் எத்தனை வெயிலையும் தாங்கி வளரும் என்கிறார்கள். இந்த முறையை "மூடாக்கு' என்று அழைக்கின்றனர்.

 நாமெல்லாம் "மானாவாரி பயிர்கள்' என்று குறிப்பிடுகிறோமல்லவா? உண்மையில் அவை "வானாவாரிப் பயிர்கள்'. பேச்சு வழக்கில் வானத்தை "மானம்' என்று அழைத்து அழைத்து அவை மானாவாரிப் பயிர்களாகிவிட்டன என்கிறார்கள்.

 இதுபோல ஏராளமான எளிய- இயற்கை விவசாய முறைகளைப் பயிற்றுவிக்கும் பல்கலைக்கழகமாக செயல்பட்டு வருகிறது "வானகம்'.
நன்றி : தினமணி மற்றும் சா. ஜெயப்பிரகாஷ்

No comments:

Post a Comment